வட்டக்கச்சி விவசாயப் பண்ணை!
வட்டக்கச்சி விவசாயப் பண்ணை 1951 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 420 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பண்ணை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இலங்கையின் இரண்டாவது பெரிய பண்ணையாக காணப்பட்டது.
வட்டக்கச்சி விவசாயப் பண்ணை தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் 26 ஏக்கரில் விவசாயப் பாடசாலையையும், மிகுதி 394 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விதை, மறு வயல் பயிர்கள் உற்பத்தி பண்ணையாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணையாகவும் செயற்பட்டது.
வட்டக்கச்சி விவசாயப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகளை, நடுகை பொருட்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான பயிற்சி வகுப்புக்களை நடாத்துதல் போன்றனவாகும்.
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் காணப்படும் வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் விவசாய பாடசாலை தற்போது தரமுயர்த்தப்பட்டு மாவட்ட விவசாய பயிற்சி நிலையமாக இயங்கி வருகிறது.
மேலும் தற்போது வட மாகாண விவசாய திணைக்களத்தின் சேவைக்கால பயிற்சி நிலையமாக காணப்படுகிறது. இங்கு வட மாகாண விவசாயிகளுக்கும் மற்றும் விவசாய உத்தியோகத்தர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் விவசாய உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி கருத்தரங்குகளும் நடைபெறுகின்றது.
தற்போது வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் 10 உத்தியோகத்தர்களும், 17 பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.
2009 இற்கு பின்னர் வட்டக்கச்சி விவசாயப் பண்ணையின் 394 ஏக்கர் காணி இலங்கை இராணுவத்தின் வசம் காணப்படுகிறது. வெறும் 26 ஏக்கர் காணி மாத்திரமே பண்ணையாக தற்போது செயற்படுகிறது.
எழில் மிகு வட்டக்கச்சி பிரதேசத்தை மேலும் அழகுபடுத்தும் ஒரு இடமாக வட்டக்கச்சி விவசாயப்பண்ணை காணப்படுகிறது.