வெற்றிவாகை சூடியது வட்டக்கச்சி இளந்தளிர்!

மறைந்த நட்சத்திர வீரர்கள் ஞாபகார்த்தமாக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் குறித்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியை வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகமும், சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுத்திருந்தன.

14 அணிகள் பங்குபற்றிய இந்த போட்டித் தொடரின் இறுதியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியுள்ளது.

உதைபந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.