அன்பான எம் உறவுகளே!
மனித பரம்பல் உலகத்தின் எல்லாத் திசைகளையும் நோக்கி விரிந்த போது தமிழனும் கால ஓட்டத்தில் நால் திசைகளிலும் கால் பதித்தான். ஆனாலும் ஈழத்தமிழனை அவனது வாழ் விடங்களை விட்டு வரலாறு காலத்துக்குக் காலம் துரத்தியது. கடந்த நாற்பது வருடங்களில் அவனது வாழ்வியலும் மாறியது. துன்பங்கள் சராசரி வாழ்வாகிப்போக மரணத்துள் வாழும் பொறி முறையைக் கற்றுக்கொண்டான்.
நாம் நேசித்த மண்ணும், வீடும், சுற்றமும் ஏன் அந்த கிராமங்களும் எமக்கு தொலை தூரமாகி வெகுநாட்கள் சென்றுவிட்டன. புலம்பெயர் நாடுகள் எமது நிரந்தர முகவரிகள் ஆகிவிடுமோ என்ற ஐயம் எல்லோர் மனதிலும் தோன்றுகிறது. இப்போது புலம்பெயர்நாடுகளில் ஈழத்தமிழனின் இரண்டாவது தலைமுறை வாழ்வை அமைத்துக்கொள்கின்றது.நாம் எங்கு வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாலும் எமது மண்ணில் வாழ்ந்த காலங்களை நினைக்கும் போதெல்லாம் மனதில் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றன.
இன்றும் தாயகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழும் எம் உறவுகள் தமது வாழ்வை பழைய நிலைக்கு கட்டியெழுப்ப கடும் முயற்சி செய்கின்றார்கள். பரம்பரைபரம்பரையாக வாழ்ந்தமண்ணில், காடுகளை களனிகளாகவும் வீடுகளாகவும் மாற்றி சுற்றம் சூழ உறவுகளுடன் அமைதியாக வாழும்காலம் வெகுதூரம் இல்லை.
கடந்த 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் அனைவரது வாழ்வும் ஆரம்பப்புள்ளிக்கே சென்றுவிட்டது. முள்ளிவாய்க்காலின் அவலம் எம் தாயக உறவுகளின் மனதில் பதித்துவிட்ட வடுக்களை களையவேண்டிய கடப்பாடும் எமதல்லவா? இத்தருணத்தில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் அரசும், ஏனைய உதவி நிறுவனங்களும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் தான் செயற்படுகின்றன. எமது இளைய சந்ததியினருக்கு ஒருபலமான அத்திவாரத்துக்கு உதவவேண்டிய கட்டாயத்தின் காலத்தில் நாம் நிற்கின்றோம். அவர்களுக்கு எம்மாலான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டிய கடமைப்பாடு உடையவர்களாகவும் இருக்கின்றோம் என்பதை ஒருகணமும் மறந்துவிட முடியாது ஏனெனில்அவர்கள் ஒருபலமானதமிழ்ச் சமுதாயமாக மீண்டும் பழைய நிலையை அடையவேண்டும்.
இன்று ஐக்கிய இராச்சியத்தில் வாழும் கிளிநொச்சிபிரதேச உறவுகள் ஆகிய நாம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஒன்றை அமைத்து எமது தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மீள்வாழ்வு அளிக்கும் பல திட்டங்களை செய்ய முன்வந்திருக்கிறோம். அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளுக்கும் மக்களது தேவைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இன்றும் காணப்படுகின்றது.இவ் இடைவெளியை நிரப்பி உறவுகளின் தேவைகளை நிறைவு செய்யும் தூரநோக்கினை நாம் கொண்டுள்ளோம்.
கல்வி வளர்ச்சிக்கு பலமான அத்திவாரத்தை இடுவதும், பொருளாதாரத்தில் தன்னிறைவைக் கொண்டுவருவதும், சுயதொழில் முயற்சிக்கு கைகொடுப்பதும், ஆரோக்கியமான சுகாதாரத்தில் வாழவைப்பதும், மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அமைத்துக்கொடுப்பதும், பெண்களுக்கு பலமான வாழ்வியல் பொறிமுறையை ஏற்படுத்துவதும், மற்றும் அநாதரவான மக்களுக்கு ஆதரவாய் நாம் இருப்பதும் போன்ற எமது குறிக்கோள்களுடன் எமதுசெயல்திட்டங்களைஅமைத்து எம் மக்களின் முன்னேற்றத்துக்காக வட்டக்கச்சி.கொம் பயணிக்க இருக்கின்றது.
அன்பான உறவுகளே:
எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும்.
கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி
வையுங்கள். pathma.srikugan@gmail.com